வேரைத்தேடும் விழுது


வேரைத்தேடும் விழுது
======================
புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்த பஸ் மரத்தடியில் நின்றது. சூட்டும் கோட்டும்
அணிந்த ஒரு மனிதர் கையில் சிறு பெட்டியுடன் கீழே இறங்கினார். கருத்த நிறமும்,
வாட்ட சாட்டமான உடலும், வெளுத்த மீசையும், சூட்டும் கோட்டும், முகத்தில் தெரிந்த
ஆப்பிரிக்க சாயலும் அவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று பறை சாற்றின. அவர்
போகுமிடம் தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தார். பஸ் வந்த தார் சாலையிலிருந்து
கப்பிக்கல் போட்ட ஒரு சாலை பிரிந்தது. எதிர்ப்பக்கம் வண்டித்தடங்களுடன்
மண் சாலை தெரிந்தது. எந்தப்பக்கம் போவது என்று குழம்பியவராய் அங்குமிங்கும்
பார்த்த போது, தூரத்தில் விளையாடும் சிறுவர்கள் கண்ணில் பட்டார்கள். வழி கேட்க
அவர்களை நோக்கி நடக்கலானார்.

அவர் ஆங்கிலத்தில் கேட்டது அவர்களுக்கு புரியவில்லை.

' உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா' என்று ஆங்கிலத்தில் வினவ, அவர்கள் சிரித்து,
"ஏ..பி..சி..டி ஒங்கப்பன் தாடி" என்று பாடினார்கள்.

அவர்களில் ஒருவன் சற்று துணிந்து, "தமிழ் தெரியுமா?" என்று கேட்டான்.

அவர்ஒரு புன்னகையுடன், "டமில், டமில். எஸ். இட்லி... தோசா" என்று தனக்கு
தெரிந்த இரண்டு வார்த்தைகளை மெதுவாக சொல்ல, சிறுவர்கள் அவர் பசி தணிய
உணவு விடுதியை தேடுவதாகப் பொருள் கொண்டு, சற்று தூரத்தில் இருந்த
டீக்கடையை சுட்டிக்காட்டினார்கள். வேறு வழியின்றி அவரும் டீக்கடை நோக்கி
நடந்தார்.

ஒரு குடிசை வீட்டை ஒட்டி எழுப்பியிருந்த ஒரு சிறு கட்டிடத்துக்கு வாயிலில் இரு
பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. கட்டிட முகப்பில் இருந்த கண்ணாடிப்பெட்டிகளில்
முறுக்கு, வடை, காராசேவு நிரப்பப்பட்டிருந்தது. அருகில் நீராவி கக்கி நிற்கும் ஒரு
கொதிபானை. ஒரு பணியாள் டீயை கயிறு போல இழுத்து ஆற்றி கண்ணாடி டம்ளர்
களில் வரிசையாக ஊற்றிக்கொண்டிருந்தான்.

அவர் அந்த ஆளிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்க, அவன் புரியாமல் ஒரு டம்ளரை
எடுத்து அவரிடம் கொடுத்தான். அவர் நன்றியறிதலுடன் அந்த தேனீரை
உறிஞ்சியவாறு, அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தார். பையிலிருந்து ஒரு தாளை
எடுத்து அதில் எழுதப்பட்டிருந்த விலாசத்தைப் பற்றி விசாரித்தார். அவன் அதை
திருப்பி திருப்பி பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் அவரிடம் திருப்பி கொடுத்தான்.

கடையை விட்டு வெளியே வந்து அந்த சிறுவர்களில் ஒருவனைக்கூப்பிட்டு, "எலே, கலியா,
போயி மேலத்தெருல பஞ்சாயத்து போர்டு பெரசிடண்டு புள்ள மணிய அழச்சிட்டு வா"
என்று கட்டளையிட்டான்.

அங்கு தேனீர் குடிக்க வந்த இருவர் மரத்தடியில் அமர்ந்து விரலால் சாடை காட்ட,
தேனீர் கடைக்காரன் இரு தனி கோப்பைகளில் தேனீரை எடுத்துகொண்டுபோய் தரையில்
வைத்தான். அவர்கள் அதை அருந்தினார்கள். ஜான் அவர்கள் மரத்தடியில் தரையில்
அமர்ந்தது கண்டு, "இங்கே இடம் இருக்கிறது. அமருங்கள்" என்பதாய் சாடை காட்ட
அவர்கள் சிரித்தார்கள். கடைக்காரன் தலையில் அடித்துகொண்டான்.

சிறிது நேரத்தில் மணி சைக்கிளில் வந்து இறங்கியதும், "இவருக்கு ஏதோ விலாசம்
தேடராரு. இங்கீலீசுல என்னமோ கேக்கராப்புல. எனக்கு புரியல. நீ கொஞ்சம் கேட்டு
சொல்லு" என்றான்.

"உங்களுக்கு என்ன வேண்டும்" என்று மணி ஆங்கிலத்தில் கேட்க, அவன் உடுத்தியிருந்த
வேட்டியை பார்த்து புன்னகைத்தவராய், அந்த மனிதர் தாளைக் காட்டி, "இந்த விலாசம்
தேடுகிறேன், உனக்கு இங்கே ராங் நாத் யார் தெரியுமா?" என்று வினவினார்.

அதைப்படித்த மணி சிரிப்புடன், " அது ராங் நாத் இல்ல. ரங்கநாதன். எங்க அப்பாதான்.
இது எங்க விலாசந்தான். நீங்க யாரு?" என்று கேட்டான்.

"என் பெயர் ஜான் கப். ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறேன். என் முன்னோர்கள் இந்தக்
கிராமத்தில் இருந்தார்களாம். அவர்கள் பிறந்த ஊரைப் பார்க்க வந்திருக்கிறேன்" என்றார்.

மணி "என்னோடு வாருங்கள்" என்று அழைத்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டே
நடக்கலானான். இருவரும் ஆங்கிலம் பேசினாலும் உச்சரிப்பு வேறுபாடுகளினால்,
புரிதலில் சற்று சிரமம் இருந்தது. இதனால் மெதுவாகவும், சொன்னதையே திரும்பவும்
சொல்ல வேண்டி இருந்தது.


"தரையில் அமர்ந்து தேனீர் அருந்துவது உங்கள் ஊர் மக்கள் வழக்கமோ?" என்றூ ஜான் கேட்டார்.

மணிக்கு அவர் கேள்வியின் பின்னணி புரிந்தது. தாழ்த்தப்பட்ட சில சாதிக்காரர்கள்
மற்றவரோடு சரி சமமாக அமரக்கூடாது என்று விளக்கியதும் அவர் திடுக்கிட்டார்.

"ஆப்ரிக்காவில் இதுபோல ஒரு காலத்தில் வெள்ளையர்களுக்கு சமமாக அமரமுடியாமல் இருந்தது. ஆனால் இங்கு எல்லா மக்களும் ஒரே நிறம் தானே. எப்படி உங்களுக்கு வித்தியாசம் தெரிகிறது?" என்று வியப்புடன் கேட்டார். மணிக்கு இதை எப்படி விளக்குவது என்று புரியவில்லை.

வீடு வாசலில் திண்ணையில் அமர்ந்திருந்த ரங்கநாதன் மணியுடன் வந்த புதிய மனிதரை
வியப்புடன் பார்த்தார். மணி தன் தந்தையை அறிமுகம் செய்து வைத்தான். "அப்பா, இவரு
ஆப்ரிக்காலேருந்து வராராம். இவங்க குடும்பத்துல யாரோ இந்த ஊருலருந்து
போனவங்களாம்" என்று விளக்கினான். "தமிழ் தெரியல. இங்கிலீசு மட்டும் பேசராரு.
உங்க பேரும் விலாசமும் வெச்சிருந்தாரு"

"என் பேர், விலாசம் எப்படி இவருகிட்ட வந்துது? " என்று குழம்பியவராய், "அமருங்கள்" என்று
எதிர்த் திண்ணையைக் காட்டினார். அங்கு அமர்ந்த ஜான், தூண்களையும், ஓடு போட்ட
கூரையையும் பார்த்து, மெதுவாகப் பேசலானார். "என் பெயர் ஜான். என்னொட தாத்தா
இந்த கிராமத்துலேருந்து வந்தவராம். ஆப்ரிக்காவுல கரும்பு தோட்டத்துல வேல
செய்ய வந்தாராம். அங்க யே தங்கிட்டாரு. ஒரு ஆப்ரிக்க பெண்ணை திருமணம்
செய்து கொண்டார். அவருக்கு பெண் வயிற்றுப்பிள்ளை நான். என் சின்ன வயசில்
அவர் இந்தியாவைப் பற்றி சொல்லுவார். அவர் குடும்பம், நண்பர்கள் பற்றி
பேசுவார். ஊருக்கு போய் எல்லோரையும் பார்க்க அவருக்கு ஆசை இருந்தாலும்
முடியாமல் போய்விட்டது. எனக்கு நாற்பது வயதாகிவிட்டது. எனக்கு இந்தியா
வரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பணம் சேர்த்து இங்கே வந்தேன். டெல்லி,
பம்பாய் எல்லாம் பார்த்துவிட்டேன். திரும்பும் முன் இந்த கிராமத்தில் வந்து என்
தாத்தா இருந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசை " என்றார்.

"உங்க தாத்தா பேரு என்ன?"

"கப். அவரு பேரு கப்பன்னு இருந்துதாம். வெள்ளைக்கார துரை கப்னு சின்னதா
சுருக்கிட்டனாம். அவரு பேருதான் எனக்கும் வெச்சிருக்காங்க"

"கேள்விப்படாத பேரா இருக்கே. தாத்தா பேர பேரனுக்கு வெக்கிற சம்பிரதாயம்
இங்க உண்டு. எனக்கும் என் தாத்தா பேரு தானே ரங்கநாதன்னு. அது சரி எப்படி
என் விலாசம் ஒங்கள்கிட்ட வந்துது?"

"எங்க தாத்தா பெட்டியில ஒரு ரசீதுல இந்த பேரும் விலாசமும் இருந்துது.
இதப்பாருங்க" என்ற ஜான், ஒரு கசங்கிய பழுப்பேறிய ரசீதைக் காட்டினார். அதை
வாங்கி மேலும் கீழும் பார்த்துவிட்டு ரங்கநாதன், " இது பிரிட்டிஷ் போஸ்டல் ஆர்டர்
ரசீது. பழய தேதி போட்டிருக்கு. இது எங்க தாத்தாவுக்கு அனுப்பினதா இருக்கும்.
எங்க தாத்தா இந்த கிராம முன்சீபா இருந்தாரு. எழுதப் படிக்கத் தெரியாத கிராம
சனங்களுக்கு அவர் பேர்லதான் லெட்டர் வரும். இன்னாருக்கு சொல்லிடுங்கன்னு
இருக்கும். அவர் அவங்களை கூப்பிட்டு வெவரம் சொல்லிடுவாரு "

"எங்க தாத்தா சொந்தக்காரங்களை நான் எப்படி கண்டு பிடிப்பேன்"

"அவரு என்ன சாதின்னு தெரியுமா?"

"தெரியாது. சாதின்னா என்ன?"

ரங்கநாதன் விளக்கினார். ஜானுக்கு தெளிவாகப் புரியவில்லை.

"ஒங்க தாத்தா இங்க என்ன வேலைல இருந்தாரு?"

"வெவசாயம்னாரு. நெல், கரும்பு பயிரிட்டாராம். சில சமயம் கொளத்துல கொக்கு
சுட்ட கதை சொல்லுவாரு".

"வெவசாயம் ரொம்ப மாறிப்போச்சு இங்க. தண்ணி பஞ்சம். மனுசனுக்கு தண்ணி
இல்ல. கொளத்துல கொக்கு வந்து மேயற காலம் மலை ஏறிப்போயிடுத்து. நெறய
பேரு பட்டணம் பக்கம் போயிட்டாங்க. இப்ப துபாய் சிங்கப்பூருன்னு போறாங்க.
எனக்கு தெரிஞ்சே எழுவது எண்பது குடும்பம் போயாச்சு. ஒங்க சொந்தக்காரங்க
வேறெங்காவது குடி போயிருக்கலாம்னு நெனக்கிறேன்"

"எனக்கு இந்த கிராமத்த பாக்கணும்னு ஆசயா இருக்கு. இன்னிக்கு சாயங்காலம்
மாட்ராசுக்கு போய் நாளக்கி பிளேன் ஏறணும் ஆப்ரிக்காக்கு"

"காட்ட சொல்றேன். நீங்க ஏதாவது சாப்டீங்களா"

"டீகடையில ஒரு டீ குடிச்சேன்"

"மணி உள்ள போயி சாப்பிட ஏதாச்சும் இருக்கான்னு கேட்டு, காப்பி
எடுத்திட்டு வா"

மணி சிறிது நேரம் கழித்து ஒரு வாழை இலையில் உப்புமா கொண்டுவைத்தான்.
அதை அவர் எப்படி சாப்பிடுவது என்று தடுமாறியபோது, ரங்கநாதன், "அவருக்கு
ஒரு ஸ்பூன் கொண்டுவந்து குடு. கையால சாப்பிடற பழக்கம் இல்ல போல"

ஸ்பூன் வந்தது. உப்புமாவை அவர் மெதுவாக ரசித்து உண்டார். பித்தளை டம்ளரை
அவர் வியப்புடன் பார்த்து காப்பியை உறிஞ்சிக்குடித்தார்.

மணி சொன்னபடி எச்சில் இலையை வாசல் வேலிப் பக்கம் எறிந்தார். மணி ,
அவர் குடித்த காப்பி பாத்திரத்தைக் கையில் எடுத்துகொண்டு போய்
முற்றத்து மூலையில் கவிழ்த்து வைப்பதை பார்த்தார். "ஆப்ரிக்காவில்
பாத்திரத்தில் ஈ மொய்க்காமல் இருக்க நாங்களும் கவிழ்த்து வைப்பதுண்டு"
என்றார். மணி கவிழ்த்து வைத்ததன்காரணம் வேறாயினும், விளக்க மனமின்றி, ஆமோதித்து,
கிணற்றங்கரைக்கு கை கழுவ அவரை அழைத்துச் சென்றான்.
"இந்தக்கிணறுதான் எங்கள் குடும்பத்தின் தன்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது"
என்று பெருமையோடு விளக்கினான். பசுமையான தோட்டத்தையும், அங்கிருந்த
பூச்செடிகள், மரங்களை ஜான் பார்வையிட்டார். "உனக்கு தோட்ட வேலையில்
ஆர்வம் அதிகமோ? இவ்வளவு சிறப்பாக தோட்டம் இருக்கிறதே" என்றார் ஜான்.
"நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. எங்களுக்கு ஒரு வேலைக்காரன் உண்டு. அவன்தான்
தோட்டத்தை பராமரிக்கிறான்" என்று மணி சொல்லி தூரத்தில் வேலியருகே அமர்ந்திருந்த
ஒரு ஆளைக் கட்டினான். இருவரும் திரும்பி வாசலுக்கு போய் திண்ணையில் அமர்ந்தார்கள்.

"மணி. காசி எங்க ? கொல்லையில வேலி அடச்சிட்டு இருக்கன்னு நெனக்கிறேன்.
அழச்சிட்டு வா" என்று கட்டளையிட்டார். சிறிது நேரம் கழித்து காசி பக்கத்து
மாட்டுக்கொட்டகை வாயில் வழியாக வெளிப்பட்டான்.
பவ்யமாக கைகளைக் கட்டிக்கொண்டு அவர்கள் முன்னால் வந்து நின்றான்.

"காசி இவரு ஆப்ரிக்காலேருந்து வந்திருக்காரு. நம்ம கிராமத்த பாக்கணுமாம். அவர்
கூடப்போயி சுத்திக்காட்டிட்டு வா"

இதற்குள், ஜான் கைகூப்பி காசியை வணங்கி " கம். ஸிட் ஹியர்" என்று அழைத்தார்.
காசிக்கு புரியவில்லை. "அய்யா என்ன சொல்ராப்புல" என்று கேட்டான்.

ரங்கநாதன் , " இவன் வேலைக்காரன். என் எதிரில் உட்கார மாட்டான். நீங்கள்
இவனுடன் போங்கள், கிராமத்தை பார்க்க" என்றார்.

ஜான் எழுந்தார். மணியைப் பார்த்து, "நீ என்னுடன் வரமுடியுமா? எனக்கு தமிழ் தெரியாது.
இங்லீசில் மொழிபெயர்த்து சொல்ல நீயும் கூட வந்தால் நல்லது" என்று கேட்க, மணி
ரங்கநாதனைப் பார்த்தான். "நீயும் போயிட்டு வா" என்று ரங்கநாதன் மணியை அனுமதிக்க,
அவர்கள் எழுந்து போனார்கள்.

ஜானுக்கு எதைப்பார்த்தாலும் வியப்பாக இருந்தது. நிறையக் கேள்விகள் கேட்டார்.
மணி தனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும், சில சமயம் தமிழையே ஆங்கிலம் போலவும்,
ஆங்கிலப்பதம் தெரியாமல் போனால் கைசாடையிலும் சொன்னான். காட்டாமணக்கு
செடி காட்டாமண்க்ஸ் ஆனது. பூவரசமரம் பூர்சா ட்ரீ யாக மாறியது.

ஆடு, மாடு அரசமரம், குளம் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக்
கொண்டார். மேலத்தெரு, கீழத்தெரு வழியாக போகும்போது எல்லார் வீட்டிலிருந்தும்
ஒருவர் வெளிப்பட்டு இவர்கள் போவதை பார்த்தார்கள். புது ஆள் யாரென்று மணியை
நேரடியாக விசாரித்தார்கள். 'ஆப்ரிக்காலேருந்து வந்திருக்காரு. ஊரப்பாக்கணுமாம்'
என்று மணி விளக்கம் சொன்னான்.

பிறகு குடியானவர் தெரு வழியாக போனார்கள். ஒரு குடிசை வீட்டு வாசலில் காசி
"இது என் வீடு என்று அவருகிட்ட சொல்லுங்க" என்றான் பெருமையுடன். மணி அதை
மொழிபெயர்த்தவுடன் ஜான், மகிழ்வுடன் "வெரி குட்" என்று சொல்லி அதைப்
புகைப்படம் எடுத்தார்.

காசியின் ஏழு வயதுப்பெண் தன் தம்பியை இடுப்பில் சுமந்து வெளிப்பட்டாள்.
"இது காசியின் குழந்தைகள்" என்று மணி சொல்ல, ஜான்
அவர்களையும் படம் பிடித்தார். பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை அந்தப்
பெண்ணிடம் கொடுக்க அவள் வாங்க தயங்கினாள்.

"வாங்கிக்க" என்று மணி சொல்ல அவள் வாங்கிக்கொண்டாள். காசியின் முகம்
மலர்ந்தது. "வீட்டுக்கு உள்ளே போய் பார்க்கலாமா" என்று ஜான் ஆர்வத்துடன்
கேட்க, காசி மிகுந்த தயக்கத்துடன், "பொஞ்சாதிக்கு ஒடம்பு சரியில்ல.
படுத்திருக்கு. ஒக்கார இடம் இல்ல. இதப்போய் இவருக்கு ஏங்க காட்டணும்.
உள்ள வந்தா இவரு கோட்டுல்ல அழுக்காயிரும். நம்ம போவலாம்" என்று சொல்ல,
அதை ஜானுக்கு மணி பக்குவமாக மொழி பெயர்த்தான்.

புரிந்தவராக ஜான் மேலே நடந்தார்.

காசி வசித்த தெருமுனையில் ஒரு கிணற்றில் தண்ணீர் எடுக்க குடங்களுடன் பெண்கள்
நின்றிருந்தனர். ஜான் இதை புகைப்படம் எடுத்தார். பெண்கள் கூச்சத்துடன்
புடவையைப் போர்த்திக்கொள்ள மணி அவர்களுக்கு இவர் வெளிநாட்டிலிருந்து
வருகிறார் என்பதை தெரிவித்தான்.

"என் கொழந்தய எடுக்கச்சொல்லு. நா வேணாம்" என்று ஒரு பெண்மணி தன்
குழந்தையைத் தரையில் நிறுத்தினாள்.
அது அழத்தொடங்கியது.
"சனி. இதை ஒரு போட்டோ புடிக்கலாம்னாஅழுவுது, மொகரக்கட்ட"
என்று தலையில் ஒரு ஒரு குட்டு வைத்து இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்ள
அது மேலும் வீறிட்டு அலறியது.
ஜான் இதைக்கேட்டறிந்துகொண்டார்.

பையிலிருந்து ஒரு பப்பிள் கம்மை எடுத்து அழும் குழந்தையிடம் கொடுக்க அது
அழுகையை நிறுத்தியது. ஜான் அதை புகைப்படம் எடுத்தார். கயிறு, ராட்டினம்,
குடம் இவற்றை படம்பிடித்துக்கொண்டார். குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டு
ஒரு குடத்து நீரில் கால் குடம் ஒரே மூச்சில் குடித்துவிட்டு, தன் தலையிலும்
கொஞ்சம் விட்டு நனைத்துக்கொண்டது அவர்களுக்கு சிரிப்பாயிருந்தது.

அடுத்ததாக சேரியின் ஆரம்பம் வந்தது. "போதுங்க. சேரிக்கேல்லாம் இவர அழச்சிட்டு
போகவேண்டாம். நீங்களும் வரவேண்டாம. அய்யா கோவிச்சுப்பாங்க. திரும்பிரலாம்"
என்றான் காசி. ஜானுக்கு இதில் உடன் பாடு இல்லை. அதையும் பார்க்க வேண்டும்
என்றார். வேறுவழியின்றி எல்லோரும் போனார்கள்.

சேரியின் தொடக்கத்தில் ஒரு குட்டை இருந்தது. தண்ணீர் மேலே தெளிவாகவும்
கீழே கலங்கலாகவும் இருந்தது. ஒரு பெண் தெளிவான நீர் மட்டும் குடத்தில் ஏறும்
வகையில் குடத்தை சாய்த்து பிடித்தாள். பின்னால் நான்கைந்து பெண்கள் தண்ணீர்
மொள்ள தங்கள் முறைக்காக காத்திருந்தார்கள். சற்று தொலைவில் ஒரு எருமை
நீரில் அமிழ்ந்து தலையை மட்டும் தூக்கிப் பார்த்தது. "இந்த அசுத்தமான நீரை ஏன்
சேகரிக்கிறார்கள்" என்று ஜான் அதிசயப்பட்டார். இதை அவர்கள் குடிதண்ணீராக
பயன்படுத்துகிறார்கள் என்றவுடன் அவரால் நம்பமுடியவில்லை. "ஏன் இவர்கள் அந்த
தெரு கிணற்றில் போய் தண்ணீர் எடுத்துக்கொள்ளக்கூடாது " என்ற கேள்விக்கு
விடையளிக்க மணி தயங்கினான். காசியைப்பார்த்து " அங்க போயி ஒங்க தெரு
கெணத்துல ஏன் இவங்க தண்ணி மொள்ளக்கூடதுன்னு கேக்கராரு" என்றான்.
காசி சற்றும் தயக்கமில்லாமல் "இதுல என்ன யோசன. சொல்லுங்க கையை
வெட்டிருவம்னு" என்று சொல்லியதுடன் நில்லாமல், எங்கே மணியின்
ஆங்கில மொழிபெயர்ப்பு துல்லியமாக இருக்காதோ என்ற ஐயத்தில் தன்
கையை இன்னொரு கையால் கத்தியால் வெட்டுவது போல் காட்டி "பட், பட்"
என்றான். தீண்டாமை பற்றி மணி ஒரு உரை நிகழ்த்தவேண்டி
இருந்தது. ஜான் அதைக்கேட்டு மிக விசனமுற்றார். அந்த தெருவுக்குள்
இருந்த எளிய குடிசைகளையும் சேறும் சகதியும் நிறைந்த அந்த தெருக்களில்
பன்றிகளும், நாய்களும் விளையாடுவதையும் சோகமான முகத்துடன்
படம் பிடித்தார்.

அவர்கள் பிற்பகல் சுமார் இரண்டு மணி வாக்கில் திரும்பி ரங்கநாதன் இல்லத்தை
அடைந்தார்கள்.

"என்ன பார்த்தீர்களா உங்கள் முன்னோர் வாழ்ந்த கிராமத்தை" என்றார் ரங்க நாதன்.

"உம். பார்த்தேன். என் தாத்தன் ஏன் திரும்பி இங்கே வரவேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டான்
என்று புரியவில்லை" என்றார்.

"எல்லாம் மனசுதான் காரணம். வயசான காலத்துல பொறந்த ஊரப்பாக்கணும்னு
தோன்றுவது இயற்கைதானே"

"உங்க நாடு சுதந்திரம் அடஞ்சு அம்பது வருடம் இருக்குமா? இங்கு ஜனநாயக அரசுதானே?
ஏன் இப்படி பெருவாரியான மக்கள் அடிப்படைத்தேவைகள் கிடைக்காமல் விலங்குகள் போல்
வாழ்கிறார்கள்? தங்கள் வாக்குரிமையை பயன் படுத்தி தங்கள் தேவைகளை நிறைவேற்றும்
அரசை இவர்களால் ஏன் தேர்ந்தெடுக்க முடியவில்லை?" என்று வருத்ததுடன் ஜான் கேட்டார்.

"முக்கிய காரணம் கல்வி அறிவின்மை. படிக்காதவனுக்கு ஓட்டுரிமை கொடுப்பதும் ஆடு
மாடுகளுக்கு ஓட்டுரிமை கொடுப்பதும் ஒன்றுதான். இவர்கள் வாக்கு வன்மையுள்ள
அரசியல்வாதிகளாலும் வேடம் போடும் நடிகர்களாலும் ஏமாற்றப் படுகிறார்கள்.
பதவிக்கு வந்தவர்கள், தங்கள் நலத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு
ஒதுக்கப்படும் பணம் முழுவதும் இவர்களை அடைவதே இல்லை. இத்தனைக்கும் நானும் பஞ்சாயத்து போர்டுல இருக்கேன். எங்களுக்கு பணம் வந்தாத்தானே கெணறு, பம்புன்னு ஏதாவது வெச்சு நன்மை செய்ய முடியும்?"

"இங்க யாரு என்னோட முன்னோர்கள்னு கண்டுபிடிக்கமுடியும்? ஏதாவது பதிவு அலுவலகம்
சர்ச்சு ரெகார்டு ஏதாவது இருக்காதா" என்றார் ஜான்.

"இங்க அவ்வளவு முன்னேறல. தாலுக்கா ஆபீசுல போனா மொட்டைத்தாதன் குட்டையில்
விழுந்தான்னு, சம்பந்தமில்லாம, இத்தனாம் தேதி பொண்ணொ, புள்ளையோ பொறந்துதுன்னு
இருக்கும். அதையும் நீங்க லஞ்சம் கொடுத்து வாங்கறதுகுள்ள சொர்க்கத்துக்கே போயி
விசாரிச்சிட்டு வந்திடலாம். காசு சம்பாதிக்கணும்னு ஆசையில வெளியூருக்கு வெளிநாட்டுக்கு
போயிடராங்க. சொந்தபந்தத்தை கண்டுக்கிறதில்ல. அடிக்கடி வந்தும் பாக்கறதில்ல. கல்யாணம் சாவுன்னா கலந்துக்குறதில்ல. உறவு விட்டுப்போயிடுது. என் பெரிய பொண்ணு கல்கத்தால இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வரா. அந்தக்குழந்தைகள் எங்கிட்ட ஒட்டரதில்ல. ஒரு தலமொறையிலேயே இவ்வளவு மாறுதல்னா, நீங்க மூணாவது தலமொறையில வந்து விசாரிச்சா என்ன கிடைக்கும்? வாங்க சாப்பிடலாம். காசி ஒரு எல பறிச்சிண்டு வா" என்றார்.

ஜான் காசியைக்காட்டி 'இவரும் என்னோட கூட சுத்தி களைப்பா இருக்காரு. இவரும்
என்னோட சாப்பிடணும்" என்று வேண்ட, காசிக்கு இது புரிந்தவுடன் நெளிந்தான்.
"நான் வீட்டுக்கு போயிக்கறேன். இன்னம் முள்ளு அடச்ச பாடில்ல"
என்று தயங்க, ரங்கநாதன் , "பரவாயில்ல காசி. நீயும் ஒக்காரு. போயி ரெண்டு எலை
பறிச்சிட்டு வா" என்றார்.

அவர்கள் உண்டு முடித்தபின் ரங்கநாதனுக்கு நன்றி சொல்லி ஜான் விடைபெற்றார். காசி
வழியனுப்ப கூடப்போனான். அவரை பஸ்ஸில் ஏற்றிவிட்டு வந்ததும், " எனக்கு நூறு ரூவா
குடுத்தாரு. என்னை பொட்டியக்கூட தூக்கச்சொல்லல. அவரே தூக்கிட்டு போனார்.
நல்ல மனுசன்" என்று காசி திரும்பி வந்து மணியிடம் சொன்னான்.

இரண்டு வாரம் கழித்து ரங்கநாதனுக்கு தபாலில் ஒரு பார்சல் வந்தது. மணி கையெழுத்து
போட்டு வாங்கி உள்ளே எடுத்துப்போனான். அதில் ஜானிடமிருந்து ஒரு கடிதமும்,
காசோலையும், புகைப்படங்களும் இருந்தன.

கடிதத்தில், "உங்கள் கிராமத்தில் நிலவும் சாதி பாகுபாடுகளும், அதில் எளிய மக்கள் படும்
கஷ்டமும் என்னை உருக்கிவிட்டன. ஆப்ரிக்காவில் வெள்ளையர்கள் ஆட்சியில் நாங்கள்
அனுபவித்த இனவேற்றுமைக் கொடுமைகளை விட தீ£ண்டாமை மோசமானது என்று
தோன்றுகிறது. உங்கள் கிராமம் என் முன்னோர்கள் வசித்த இடம் என்பதால்,
தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் செலவில் ஒரு கிணறு வெட்டித் த ஒரு காசோலை அனுப்பியிருக்கிறேன்.

கிராமத்தில் எடுத்த புகைப்படங்களுக்கு ஒரு பிரதி எடுத்து அனுப்பி இருக்கிறேன். அதை
உரியவர்களிடம் சேர்ப்பித்து விடவும். இத்துடன் என் தாத்தா தன் தம்பியுடன் எடுத்துக்
கொண்ட ஒரு பழைய புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறேன். அதை கிராமத்து
மக்களிடம் காட்டி என் தாத்தாவின் தம்பியோ அல்லது அவர் வாரிசுகளோ இருக்கும்
இடத்தை கண்டுபிடித்துகொடுத்தால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்." என்று
ஜான் எழுதியிருந்தார்.

ரங்க நாதன் அந்த புகைப்படக் குவியலைப் பார்வையிட்டார். ஜானின் தாத்தாவும் அவர்
தம்பியும் இருந்த படம் அதில் இருந்தது. அதைப்பார்த்தவுடன் அவர் முகம் மலர்ந்தது.
"அதான பாத்தேன், இப்ப நல்லா புரியுது" என்றார்.

மணி கேள்விக்குறியாக அவரைப்பார்த்தான்.

"எத்தனை வருசத்துக்கு முன்னால எடுத்த படம் ! இது நம்ம ஊரு குளம்.
அரச மரத்தடில சிவலிங்கம் இருக்கு பாரு. இதுதான் ஜானோட தாத்தா,
குப்பன். பக்கத்துல இருக்குறது குப்பனோட தம்பி சுப்பன். குப்பன் ஒரு
வெள்ளக்காரனுக்கு கொக்கு சுட ஒதவியா போவான்.
ஒரு நாளக்கி குளத்தங்கரையில அந்த வெள்ளக்காரன் எடுத்த படம் இது. நான்
யதேச்சையா அங்க பின்னால நின்னிருந்தேன். நானும் படத்துல விழுந்திருக்கேன்.
இதப்பாரு, இங்க சின்னப்பையனா ஓரத்துல நிக்கறது நான்தான். குப்பன் கரும்பு
தோட்டத்துல வேல செய்யக் கப்பலேறி ஆப்பிரிக்கா போனான்.
சுப்பன் எங்க தாத்தாகிட்ட வேல செஞ்சான். இப்ப நம்மகிட்ட வேல செய்யற
இந்தக் காசி சுப்பனோட பேரன். குப்பன் பேரைத்தான், கப்பன்னு படிச்சிட்டு
கப்னு ஜானுக்கு வெச்சிருக்காங்க"

மணி ஏதோ கண்டுபிடித்துவிட்ட மாதிரி சிரித்தான். "அப்ப, காசி ஜானுக்கு
தம்பி மாதிரி இல்ல".

"ஆமாண்டா. தம்பி மொறைதான். இதப்போயி அவன்கிட்ட சொல்லிண்டு
இருக்காத"

"ஏம்ப்பா ?"

"தெரிஞ்சு இப்ப என்ன ஆகணும்? அவன் அங்க ஆப்ரிக்கால சந்தோசமா
இருக்கான். இவன் இங்க சந்தோசம்மா இருக்கான். நமக்கும் வேல நடக்கிறது.
இதப்போயி இவன் கிட்டயோ அவன்கிட்டயோ சொன்னா, இவன்அண்ணாம்பான்,
அவன் தம்பிம்பான். நீ ஆப்ரிக்காக்கு வாடாம்பான். இல்லாட்டி நான் காசு அனுப்பறேன்
நெலம் வாங்கி பயிரிட்டு வீடு கட்டிக்கோம்பான். ஆக மொத்தம் நமக்கு வேலக்காரன்
போயிடுவான். ஆள் கிடைக்கறது குதிரை கொம்பா இருக்குல்ல இப்ப"



" அப்ப கெணறு வெட்ட பணம் கொடுத்திருக்காரே, கெணறு வெட்டப்போறீங்களா?"

" நம்ம கெணத்துல தண்ணி மட்டம் கீழ போயிடுத்து. ஒரு மோட்டார் பம்பு வெச்சா
நல்லா இருக்கும். பணத்துக்கு என்ன பண்றதுன்னு கவலப்பட்டிட்டு இருந்தேன்.
நல்ல வேளையா இது வந்துது. நீ ஏதாச்சும் ஒளறிக் கொட்டாம இரு".

"இந்த கிராமத்து சனங்க போட்டோவ என்ன பண்றது. கொடுத்திட்டு வரவா?"

"வேண்டாம். கிழிச்சு போடு. வயத்துக்கு சாப்பிட ஒண்ணும் இல்ல, போட்டோதான்
குறைச்சலா இந்த சனத்துக்கு?"

"அவரு திரும்பி வந்திட்டா?"

"ஆமாண்டா. இதுக்குன்னு அவ்வளவு செலவு பண்னி ஆப்ரிக்காலேருந்து
அவன் திரும்பி வரப்போறானா? வந்தா ஏதாவது சொல்லி சமாளிச்சிக்கலாம்"


=======================




Comments

Popular posts from this blog

முடி மன்னர்

The Melting Pot

எழிற்கொள்ளை