எழிற்கொள்ளை

 எழிற்கொள்ளை
 -------------------------------

முடிவெட்ட இடந்தேடி அலைந்த போதினில்
   மூலையில்  முளைத்த அழகுநிலையக் கடையில்
பாவையர் முகங்கண்டு பரவசமாய் நின்றேன்.
   பட்டுபோல் சருமத்துடன்  வெட்டுடன் வந்தாள்
கட்டழகு மங்கை ஒருத்தி வேகமாய்
   சிட்டுப்போல வேகமாய் விரல்கள் அசைத்தே
சிரிப்புடன் 'வாருமுள்ளே' என்றே விளித்து
    சிறுகடைக்குள் இழுத்து அழைத்துச் சென்றாள்
அமரவொரு ஆசனம் காட்டி அமர்த்தினாள்
    அன்புடன் பட்டுச் சால்வையைப் போர்த்தினாள்
குப்பியில் குளிர்ந்த நீ£ரெடுத்து தெளிப்பானிட
    குப்பென அப்பியதே சிறுநீர்த் திவலைகள்
மணக்கும் விரலால் முடியைக் கோதினாள்
    மதிமயங்கி விழிமூடி உறங்கம் கொண்டேன்

எழுப்பி முகத்துக்கு  கண்ணாடி காட்டிட
    எடைகுறைந்த தலையை உணர்ந்து தடவினேன்
தலையும் இருந்தது முடிபோய்க் காய்ந்தமாடு
   தாவிமேய்ந்த தரையாய் தஞ்சை வயலாய்.

"முகத்துக்கோர் மெழுகுண்டு முகத்துமரு போக்கிட
   முகப்பொலிவும் வேண்டுமா ?" வினவினாள் அழகியும்

முகமலர்ந்து அகமலர்ந்து 'ஆகட்டுமெ'ன சொல்லி
   மீண்டும் சாய்ந்தேன் இருக்கையில் இன்பமாக

சுற்றி மீண்டும் துணியைப் போர்த்தினாள்
   சற்றும் கையசைக்க இயலாது கட்டுண்டேன்.

கண்ணைக் கட்டினாள் களிம்பும் பூசலானாள்
   கண்மூடினும் நாசி அறிந்தது மணத்தை.

மஞ்சளும் பாலும் தேனும் தினைமாவும்
   மொச்சையும் பச்சயும் கீரையும் மிளகாயும்
வெங்காயமும் வேர்க்கடலை வேம்பும் ஆலுமாய்
   வெதுவெதுப்பாய் குழம்பாய் மாவாய் பண்டமாய்
எச்சிலிலை எறிந்த குப்பைத் தொட்டியாய்
   என்முகத்தில் பச்சியிலை நெடியே அக்கணம்..

'சற்றே பொறும்' என்று சொன்னாள்
   சடுதியில் எங்கோ காணாமல் போனாள்.
ஓம்ஓம் என்ற இசையும் பின்ணணியில்
   ஒட்டாது தவித்தேன் ஏனெனத் தெரியாமலே.

எப்ப வருவாளோ என்றே ஏங்குங்காலை
   தப்பாது வந்தாள் பாய்ந்தே தாவினாள்
தடவினாள் என்முகம் எங்கும் வெறியுடன்
   தடுக்க மனமின்றி மனதுக்குள் மகிழ்ந்தேன்
முகத்திலொரு குறுகுறுப்பு பிறாண்டல் பசபசப்பு
   மூக்கோடு மூக்கு பதிப்பதும் எதற்கோ
மூச்சும் இரைப்பது ஏனோ இவளுக்கு
   நகக்குறி பதித்தாள் நறுக்கென நாணமின்றி
நாவெழாது நானும் சகித்து இருந்தேன்
   நங்கையின் தங்கமுகம் வாடுமென அஞ்சியே

வருவோர் போவோர்  வந்தோர் இருந்தோர்
   பேசியது காதில் விழுந்து கலக்கின
'நாயை உள்ளே விட்டவர் யாரு
   நக்கிச் சுரண்டி அழித்ததே பாரு'
நாயை விரட்டும் சத்தம் கூக்குரல்
   நாராசமாய்க் கேட்டது நாயின் குரைப்பு.
'பித்தனுக்கு பேய்களிம்பை ஏனிங்கு இட்டாயோ
   கொடுவிடப் பச்சிலை முகமிடல் தகுமோ
மதியம் திரும்பாதே உனக்கு வேலைநீக்கம்
   முதலில் முழுப்பணம் வாங்கியபின் முகமலம்பிடு'
என்ன நடக்கிறது என்றே புரியவில்லை
   என்வாயும் திறக்க முடிய வில்லை

'வெய்யில் தவிரும் இருட்டில் இருந்திடும்
   வெல்லம் தவிரும் பொல்லாங்கு விளையும்
வைட்டமின் வாங்கி விழுங்குமெ'ன விலாவரியாய்
   வாய்நிறைய அறிவுரை பலவும் சொல்லி
வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி னார்கள்
   காகம்போல் உருமாறி  குருதிசொட்ட இருந்தேன்
துண்டு போட்டுச் சத்தியம் செய்தபின்
   துணைவியும் இனங்கண்டு  வீட்டிற்குள் விட்டாள்.

தோல்காயம் எல்லாம் மருத்துவர் பார்த்து
   தொப்புள் அருகே போட்டார் ஊசியும்
கடித்த நாயும் காலனிடம் போனால்
   கட்டையேற தயாராக இருமென எச்சரிக்கை.
நாயெதும் நமனுலகம் போனசேதி தேடியே
   நாளும் தாள்படித்து நடுங்கி வாழ்ந்தேன்.

பற்பல புள்ளியும் கோடும் சுருக்கமும்
   பார்த்தோர் பயப்படும் வண்ணம் இருக்க
வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலாராய்
   வேட்டியால் உடல்மூடிப் போர்த்தி மறைத்தேன்.

உடல்நலம் தேறட்டும் உங்களை சந்திக்க
   உடனே வருவேன் இனிய நண்பர்களே
எழிற்கொள்ளை யாராலோ ? நங்கையோ நாயோ
   ஏமாற்று நிலையமோ முகம்பேணும் அகம்பாவமோ?
எதுவென நானறியேன் சொல்வாரும் இல்லை
   ஆயினும், கொஞ்சுமொழி அழகுநிலைய வஞ்சியரா ?
அஞ்சியோடும் கொஞ்சம் எழிலாவது(?) தங்கிடவே.
-----------------------------

(தெரியாத்தனமாய் புதிதாக முளைத்திருந்த நவீன அழகு நிலையம்/முடிதிருத்தகத்தில்
முடிவெட்டும் (haircut) முகத்திருத்தமும் (facial) நடந்ததை அடிப்படையாகக்
கொண்டு எழுதியது; எண்சீர் விருத்தத்துக்கு உள்ள வகையெலாம்
தன்னுள்ளடக்கிய, விருத்தனருளிய வருத்தும் எண்சீர்க் கதம்ப விருத்தம் என்பாருமுளர்) (:-)

"எழிற்கொள்ளை" என்ற சந்த வசந்த கவியரங்கில் எழுதியது

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

Comments

  1. நகைச்சுவைக் கொள்ளை! :-)))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The Melting Pot

வேரைத்தேடும் விழுது